Friday 13 September 2019

குற்றம் குற்றமே - 2 : குறுந்தொகையில் (மறைக்கப்பட்ட) பிளமிங்கோ...!


இந்த இழையின் நோக்கம் :

· ..மறைந்திருக்கும் ஒருபறவையின் (பிளமிங்கோ) வாழ்வியலை வெளிப்படுத்துதல்
..கூடு அமைந்திருக்கும் இடம் மரக்கிளையா, மண்தரையா என்று உறுதி செய்தல்.
· ..இப்’பா’வின் திணையை மறுசீராய்வு செய்தல்



160, குறிஞ்சித் திணை :- தலைவி – தோழி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநம் காதலர் வரைவே


விளக்கம் : 1

தமிழ் இணையக் கல்விக்கழகம்:
முதற்குறிப்பு :- வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, ''வரைவர்'' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

விளக்கம் :-
தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து, ஒலிக்கின்றசெறிந்த இடையிரவையுடைய, பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் கூதிர்க் காலத்திலும், தலைவர் வந்தாரிலர்; நம் தலைவர் என்னை மணந்து கொள்வது, இதுதானோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆய்வு

எடுத்தாளப்பட்டச் சொற்பொருள் :

1) அன்றில் – (அன்றி + இல் = அன்றில்..) : காதல்பறவை, நாரை.

· (பொது)நாரை - வெள்ளை, பழுப்பு, கருப்பு வண்ணம் கொண்டிருக்கும் [அரிவாள் மூக்கன் குடும்பம் / பனங்கிழங்கைப் பிழந்தது போல அலகு இருக்கும். நெய்தல் நிலத்தில் , கடலோர மரக் கொம்புகளில் கூடுகட்டி வாழும்].




· (பூநாரை) பிளமிங்கோ – வெள்ளை, சிவப்புக் கலந்த தெளித்தாற்போல செந்நிறம் கொண்டிருக்கும் .[ இறால்மீன் போல அலகு வளைந்து இருக்கும் . . நெய்தல் நிலத்தில் , தரையில் மண்வைத்து வட்டக் கூடுகட்டி வாழும்



· தடவு – பகுதி வளைவு சிறைச்சாலை ஓமகுண்டம் மரவகை ( தடா மரம் என்று பொருள்கொள்ளப் பட்டுள்ளது ) / பூசு வருடு


ஓங்குதல் - உயர்தல் பரவுதல் வளர்தல் பெருமையுறுதல் vomit; சத்திசெய்தல் உயர்த்துதல்

· சினை - மரக்கிளை மூங்கில் சூல் முட்டை உறுப்பு தோன்று கரு குண்டாகு புத்தன்

· கட்சி – காடு புகலிடம் கூடு பிரிவு போர்க்களம் சரீரம் பங்கு வழி


· வரைவு - எல்லை பொதுமகள் வரைதல் தொழில்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சில புரிதல்கள் :

முன்னோர் விளக்கத்தில் -- செந்தலை, இறால்மீன் போல் அலகு என்னும் குறிப்புகளைக் கவனிக்காமல், பொதுவான நாரை இனம் எனக் கணித்து , (அதனால் தடம்மாறி), கூடு மரத்தில் இருப்பதாக உரை தரப்பட்டுள்ளது. அதன்மூலம், காத்திருத்தலுக்கு இலக்கணமான பிளமிங்கோவின் தரையில் கூடுகட்டி வாழும் வாழ்வியல் முறை பதியப்படாமல் விடுப்பட்டுப் போயிருக்கிறது .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



திணை பற்றியச் சீராய்வு:

n நிகழும் காலம் - குறிஞ்சியின் ’சிறுபொழுது / சாமம்’

n நிகழும் களம் – நெய்தலின் ’கடற்கரை / உப்பங்கழி’

n உரிப்பொருள்/ உணர்ச்சி - நெய்தலின் ’ஏங்குதல்’ / முல்லையின் ’காத்திருத்தல்’



எனவே இப்பாவில் குறிஞ்சி, நெய்தல், முல்லை என மூன்று திணைகளும் அடங்கும் எனக் கொள்வதே பொருத்தமாக அமையும் .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விளக்கம் : 2

<b>துரைப்பார்வையில் விளக்கப்பா :

._நெருப்பினைப் போல்சிவந்த செந்தலைப்பூ நாரை *,
இறால்மீன்போல் வாய்வளைந்தப் பெட்டைஅடை காத்திருக்கும்*,
ஓமகுண்டம் போலிருக்கும் கூட்டருகில் நின்றுஏங்கி,
>கேட்கும் பிரிந்தோரைத் தூண்டும்< வகைக்கூவும் _ நீள்இரவின் வாடைமிகும் வேளையிலும் வாரார்! இதுதானோ தோழி,நம் காதலரின் ஆக்கமே!!



குறிப்பு : * பூநாரை - பிளமிங்கோ- (கோடியக்கரை)உப்பங்கழியின் கரையில் (ஓமகுண்டம் போலக்) கட்டும் சிறுமண்கூட்டில், ஒருபறவை மட்டுமே (பெரும்பாலும் பெண்) அடைகாக்கும், மற்றது வெளியே தனித்து,ஏங்கிக் காத்து நின்றிருக்கும்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வேண்டுகோள் :
விளக்கம் : 1, விளக்கம் : 2 – இரண்டிலும் உள்ள மெய்ப்பொருளை ஆராய்ந்து, எளிய, சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்..



தொடரும் -----

Wednesday 11 September 2019

கூந்தலுக்கு இயற்கையிலேயே உள்ளது அழகா? மணமா??


‘கொங்குதேர் வாழ்க்கையின்’ ஐயத்திற்கு தீர்வு :-

• ’பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா , இல்லையா ?’ -என்னும் கேள்வியா உள்ளது அங்கு ?? .
• கேட்கப் பட்டிருப்பது கூந்தலின் ‘அழகு / புத்துணர்ச்சி’ பற்றியக் கேள்விதான் என்பதற்கான விளக்கம் …..

2, இறையனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது* மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின் மயில்இயல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீஅறியும் பூவே

புரிதல்:
1) *கண்டதைச் சொல்வாயா? என்னும் வேண்டுதலின் மூலம், எதிர்பார்ப்பு ’வாசம்,மணம்’ சம்பந்தப்பட்டது இல்லை என்பதும், ’ தோற்றம், புத்துணர்ச்சி ( fressness)’ பற்றியக் கேள்வியது என்பதும் உறுதியாகிறது.
2) மயில்இயல் , செறிஎயிற்று – போன்ற பெண்ணின் இயல்புப் பற்றியக் குறிப்புகள் (மயில் சாயல் கொண்டவள், நெருங்கிய பல் உள்ளவள் - என்று ) உருவ அமைப்பாகத் தவறாககக் கணிக்கப் பட்டுள்ளது . (பல் நெருக்கம், அளவை வைத்து விலங்குகளின் பருவம்/வயதைக் கணிக்கும் வழக்கம் தான் நடைமுறையில் உள்ளது) .
3) கருப்புக் கூந்தலைவிடவும் அழகிய வண்ண மலர்களைக் கண்டிருக்கிறாயா ? என்னும் பெருமைதான் கேள்வியில் புலப்படுகிறது

விளக்கம் : 1
துரைப்பார்வையில் விளக்கப்பா :

.தேனைத்தேர்ந்து உண்ணும் அழகுஇறகு ஆண்வண்டே ,
உன்விருப்பம் சொல்லாமல் கண்டதை*ச்சொல் வாயா!
#அயல்போல் நடித்து1 மயில்போல் மிகநெருங்கி2
பல்போல் உரசும்3இளம்# பெண்கருங் கூந்தலின்
புத்துணர்ச்சி * உண்டோநீ கண்டவண்ணப் பூக்களிலே!!

எடுத்தாளப்பட்டச் சொற்பொருள் :

கொங்கு :-தேன் பூந்தாது வாசனை கள் புறத்தோல் கருஞ்சுரை /கோயமுத்தூர் சேலம் ஜில்லாக் களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு/
தேர் - இரதம் வண்டி கானல் தேர், தேர்ந்தெடு, அறிந்துகொள், பயில், ( தேர் காடு நந்தவனம் வாசனை பேதை வானம்பாடி இசைப்பாட்டு )
அம் - அழகு நீர் நோக்கம் எச்சம் நலம் கொடுமை சிரிப்பு அன்னம் அழைப்பு போர் அம்பு ஆணை தீர்க்கம்
சிறை - காவல் சிறைச்சாலை அடிமைத்தனம் சிறைப்பிடிக்கப்பட்டஇளம்பெண் அணை இறகு பாத்தி நீர்நிலை மதகுகள் கரை இடம் பக்கம்
தும்பி – யானை வண்டு ஆண்வண்டு Dragon-fly கடல்மீன்வகை காட்டத்திமரம் கரும்பு Wickedwomanதுஷ்டை
காமம்:- விருப்பம் புணர்ச்சியின்பம் காமநீர் Tax; இறை விரும்பியபொருள் ஊர் குடி
பயில் :-பழக்கம் சொல் சைகை(Secret language)
கெழி :-நட்பு
கெழீஇயிலி :- பகைவன்
செறி :- சேர் நெருக்கம் செறிவு கல புணர்
நறி :-குளிர் மணம் நாற்றம் / வெண்மை(வெள்ளைநிறம் ஒளி இளமை மனக்கவடின்மை அறிவின்மை)
விளக்கவுரை :
(பூவின் மணம் மூலம் ஈர்க்கப்பட்டு, தேடிவந்து) தேனைத்தேர்ந்து உண்ணும் அழகுஇறகு ஆண்வண்டே , (முகர்ந்து உணர்ந்த, நுகர்ந்து அறிந்த) உன்விருப்பத்தைச் சொல்லாமல், (உன் கண்ணால்) கண்டு ரசித்ததை*ச் சொல்வாயா! அயல்போல் (விலகி இருப்பதுபோல்) நடித்து, மயில்போல் மிகநெருங்கி, பல்போல் (தொட்டு)உரசும் இளம்பெண்ணின் கருங்கூந்தலின் (பொங்கும் அழகு / ) புத்துணர்ச்சி* (போல் ஏதேனும் )உண்டோநீ கண்டவண்ணப் பூக்களிலே!!

@@@@@@@@@@@@@@@@@

விளக்கம் : 2
தமிழ் இணையக் கல்விக்கழகம்:
முதற்குறிப்பு :- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது. - இறையனார்.
விளக்கம் :- பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக: எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய, இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறுமண முடைய பூக்களும் நீ அறியும் மலர்களுள், உள்ளனவோ?
@@@@@@@@@@@@@@@@@


வேண்டுகோள் :
விளக்கம் : 1, விளக்கம் : 2 – இரண்டிலும் உள்ள மெய்ப்பொருளை ஆராய்ந்து, எளிய, சரியான மூலத்திற்கு நெருக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்..

குறுந்தொகையின் (மறைக்கப்பட்ட) பெருங்கதை.....!


முன்னுரை :
சிறிது அளவுமீறிய நீளத்தில் இருக்கும் இந்த அறிமுகத்தை / உரையைப் பொறுத்துக் கொள்ளுங்கள் . எல்லாம் சிறப்பாக நடந்து முடியும் இடத்தில், குறுந்தொகையை மறுசீராய்வு செய்து, ஒரு புதிய உருவில் வெளிப்படுத்தி, ’ஒரு வரலாற்று நிகழ்வுக்கான பயணத்தின் துவக்கப் புள்ளியை நாம் வைத்தோம்’ என்னும் பெருமையை அடைந்திருப்போம் ..!

• பொறுப்புத் துறப்பு:
• குறுந்தொகைக்கு இதுவரையிலும் உள்ள விளக்கவுரைகளில் பரவலாக விரவி இருக்கும் 400க்கும் மேற்பட்டக் குழப்பங்களையும், தெளிவின்மையையும் ஆய்வுசெய்து, சரியான தீர்வோடுத் தொடுக்கப்பட்டிருக்கும் இழை இது.
•ஆய்வின் மூலம் அறிந்தக் குறைகளைச் சுட்டுவதும், குற்றங்களைச் சாட்டுவதும் மட்டுமில்லை இந்த இழையின் ஆக்கம். குறைகளைச் சரிசெய்து தெளிவு பெறவேண்டும், பாக்களின் மெய்ப்பொருளை உலகறியச் செய்யவேண்டும் என்பதே மிகமுக்கிய நோக்கமாகும் .

குறுந்தொகை :- ஓர் அறிமுகம்
பொதுவாக, ஒரு நெடும்பயணத்தின் போது, சுற்றி நிகழும் சகப்பயணிகளின் உரையாடல்கள் காதில் வந்து விழுந்துகொண்டே இருக்கும் . சில நேரங்களில், அதிலுள்ள சிலசெய்திகள், , மனதுக்குள் போய் சம்மணமிட்டு அமர்ந்துவிடும் … அதுபோன்று, நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்த 401 கதாபாத்திரங்கள் 401 இடங்களில் தனக்குள் நினைத்தக் குறிப்புகளின் (mind voice) , வாய்வழியாக உரைத்த உணர்ச்சிகரமான (அக்காலக்) குறுஞ்செய்தி(sms)களின் நேரடிப் பதிவும் தொகுப்பும்தான் குறுந்தொகையாகும் …

• குறுந்தொகையின் ஒவ்வொரு பாவும் ஒவ்வொரு குறுங்கதை / குறுங்கவிதை/ விடுகதை ஆகும் . சிலபாடல்கள் விடுகதையாக , சிலபாடல்களில் ஒவ்வொரு சொல்லுமே விடுகதையாக அமைந்திருக்கிறது. அவ்விடுகதைகளின் விடைகளின் தொகுப்புத்தான் பாடலின் உண்மைப் பொருளாகிறது .

• குறுந்தொகையின் ஒவ்வொரு பாவும் இயற்கையைப் போற்றி, அதுபோல் இல்லாத மனித இயல்புகளைப் பற்றி / தூற்றி / பருவம் வந்தவுடன் தூண்டுதல் இல்லாமல் தானே நிகழும் இயற்கையையும், பருவம் தப்புவதால் ஏங்கும் மானுட இயல்பையும் ஒப்புமைப் படுத்தி , எழும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு, 5 திணைகளை இலக்குகளாக வைத்துக் குறிவைத்து எய்யப்பட்ட வெவ்வேறுவகை அளவு, வேகம், விசை, எடை, கூர்மை கொண்ட அம்புகள் ஆகும்..

• குறுந்தொகையின் ஒவ்வொரு பாவும் #கடுகைத் துளைத்துப் பெரும்கடலை அடைத்து வைத்தது போல்# சொல்லுக்குள் அடர்பொருளைப் புதைத்து வைத்திருக்கும் பாக்கள். அப்‘பா’க்களைக் கடுகு எனவே கடந்திருக்கிறோம் இதுவரையிலும். எளிதாய் எதோ சொல்லி இருப்பதுபோல் ஒரு குறிப்பை மேலோட்டமாய்க் காட்டித் திசைதிருப்பி விட்டு, உள்ளே வேறுஒன்றை விதைத்திக்கும் பாடல்கள்களைச் சரியாகப் புரியுமிடம் நம்முன்னால் விரியும் ஒர் அற்புதப் புதையல். அதை உணரும்பொழுது நாம்தான் அவ்விடத்தில் கடுகாகிப் போகிறோம்.

மூலப்பாக்களைப் பற்றிய ஒருபார்வை:
1 ) பா’வின் வகை :
போகும்போக்கில் “எடுத்துக்கொள்” என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போகும் ’நேரடிப்பாக்கள்’ ஒருவகை எனில், “கண்டுபிடி, பார்க்கலாம்” என்று சவால்விட்டு (மடைமாற்றும் சொற்களோடு, மறை பொருட்களோடு) எதிர்த்து நிற்கும் ’விடுகதைப்பாக்கள்’ இன்னோருவகை. ( *இந்த வகைப் பாக்களைத்தான் உரையாசிரியர்கள் , முதல் வகையாகக் கருதிக் கொண்டு மேலோட்டமாகவே உரை அமைத்திருக்கிறார்கள்)

2 ) பா’ வின் அமைப்பு :

எல்லாப் பாக்களுமே முதல்வரியில் துவங்கி, இறுதிவரியில் முடியும் பாக்கள் அல்ல.. பெரும்பாலான பாக்கள் வரிகளுக்கு நடுவில் துவங்கி, ஈற்றுவரை நகர்ந்து, முதல்வரியில் தொடர்ந்து, துவங்கிய இடத்திற்குப் பின்னால் வந்து முடியுமாறு ஓர் அமைப்பில் உள்ளன என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் . அதற்கானக் குறியீடுகள் விளக்கப் பாக்களில் தந்திருக்கிறேன்.

இந்த ஆய்வு / விளக்கவுரையின் தேவைக்கான விளக்கம் :
சங்க இலக்கியத்தை நோக்கி ஆச்சரியத்தோடு சாமானியரைத் திருப்பிய திருவிளையாடல் தந்த ஊக்கத்தில் சிம்மக்குரலோனின் ’கொங்குதேர் வாழ்க்கை’யில் நானும் விளையாட்டாய் இறங்கியதன் விளைவுதான் இந்த விரிவும் வழக்கும். திரையில் அப்பாடலின் பொருளில் தவறு இருப்பதாய் நக்கீரன் ஈசனிடம் குற்றம்சாட்டி விவாதிப்பதாய்ச் காட்டும் களத்தில், தவறான உரையின் அடிப்படையில் காட்சி அமைத்து , அதையே உலகெங்கும் விதைத்து வேரூன்ற வைத்திருக்கிறார்கள் என்னும் அதிர்ச்சித்தான் கிடைத்தது எனக்கு. அப் பாடலைப் பற்றி நமக்கு இதுவரையிலும் ஊட்டப்பட்டுள்ள ஒருபிம்பத்தைத் தலைகீழாய் மாற்றிப் போடும் மறைந்திருந்த புதிய விளக்கங்கள் இரண்டை உங்கள்முன் சாட்சிகளுடன் விளக்கி இருக்கிறேன் .. அதை அறிந்துகொள்ளும் இடத்தில் ‘அந்த’ அதிர்ச்சி உங்களையும் தாக்கி இருக்கும்.

அதிர்வோடு, மேலும் விளக்க உரைகளைத் தொடர்ந்த போது, 4 – 8 அடிகளுக்குள் அடங்கிய பாக்களில் உள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்டக் குறிப்புகள் / செய்திகள், எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அள்ளித் தெளித்ததுபோல் இருக்கும் என்னும் கேள்விதான் முதலில் எழுந்தது! ’அப்படியாச் சொல்லி இருப்பார்கள் நம்முன்னோர்கள்?’ என்னும் அடிப்படை ஐயம் தான் குறுந்தொகைக்குள் என்னை நுழைய வைத்த அடுத்த அதிர்வுப் புள்ளி .
வாசகனாய், விமர்சகனாய் நெருங்கும் பொழுது நெருடலாய்த் தோன்றியதை எல்லாம் ’உள்ளதை உள்ளபடி நேரடியாகச் சொல்வதற்கு, சொல்வன்மை மிக்க வல்லவர் எதற்கு’..என்னும் ஐயத்தோடு ஆர்வலனாய், ஆய்வாளனாய் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் பொழுதுதான் மறைந்திருந்தப் புதுவிடைகளும், புதைந்திருந்த மெய்உருவமும் கிடைத்திருக்கிறது .

சிலகேள்விகள் :
ஒருசில நேரடிப்பாக்களைத் தவிர்த்து, பாக்களில் உள்ள மேற்கோள்கள் பெரும்பாலும் அரசனின் புகழ்ச்சிக்கு சொல்லப்பட்டதாகவே கருதப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளது. இவற்றில் புதைந்திருக்கும் உட்பொருளை , பின் தொடர்ந்து வரும் (இடம் , பொருள், எவல் என) தன்னிலைக் குறிப்புகளோடு யாருமே இணைத்துப்பார்க்கவில்லை. .
ஆழ்மனக் குமுறல்களின், வாய்வழிப் புலம்பல்களின் ஆழத்தை எங்குமே யாருமே கண்டுகொள்ளவில்லை … ஏன் ?

பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளக் களத்தைத் தெரிந்து, சூழலைப் புரிந்து ,
உணர்ச்சியை உணர்ந்து, பொருள் அறிய முற்படும் இடத்தில்தான் முழுமையான விளக்கம் வந்தடையும் .. செழுமையும் , புலமையும் செரிந்த சொற்களால் கோர்க்கப்பட்ட பாக்களின் உட்கருத்தையும் மறைபொருளையும் கணக்கில் கொள்ளாமல் , மேலேட்டமாய் எல்லாரும் அறிந்த முதல் அருஞ்சொற்பொருளை மட்டும் கணக்கில் கொண்டு பெரும்பான்மை உரைகள் எழுதப்பட்டுள்ளன …. ஏன்?

ஒருசொல்லுக்கு குறைந்த அளவில் 10 பொருட்களாவது இருக்கும் என்பது தமிழின் பெருமையாகும். அதில் சூழலுக்குத் தகுந்த சரியான பொருளைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டியது தான் நமது கடமை. ஆனால், எல்லார்க்கும் தெரிந்த வழக்குப்பொருளை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதைச்சுற்றி ஒரு சூழலை உருவாக்கி, (200 +)பாக்களுக்கு விளக்கக் கூற்றுகள் என்னும் பெயரில் நடத்தப்பட்டிருக்கும் கூத்துக்களைக் காணும்பொழுது , தனித்தனி வரிகளாக அளித்தத் தம்விளக்கத்தை ஒருமுறையேனும் எழுதியவர்கள் , சேர்த்துப் படித்திருப்பார்களா என்னும் ஐயமே மேலெழுகிறது. தவறான புரிதலால் தடம் மாறிய விளக்கங்களை, உரைஆசிரியர்கள் ஒரு மறுவாசிப்பு செய்திருந்தாலே , எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்க முடியும் ..
செய்யவில்லை … ஏன்?

மூலத்தில் பாடல்கள்,
@ திணை அடிப்படையில் பகுக்கப் படவில்லையே, ஏன் ?
@ பாடலாசிரியர் வகையிலும் தொகுக்கப் படவில்லையே, ஏன் ?
@ உரிப்பொருள் அடிப்படையிலும் பகுக்கப் படவில்லையே, ஏன் ?

சிலபுரிதல்கள் :
விளக்கவுரைகளில் நிகழ்ந்திருக்கும் (1)தடுமாற்றங்களையும், (2)தடம்மாற்றங்களையும் கீழ்வருமாறு வகைப் படுத்தலாம்
1. அறியாமையால் நடந்த சிறுபிழை (தடுமாற்றம்) -
• 100 +இடங்களில் சொற்களுக்குத் தவறானப் பொருள்மூலம் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது
• 200 +இடங்களில், மூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ள திணைகள் , உரிப்பொருள்/ உணர்ச்சியோடு ஒத்துப்போகவில்லை.
• 100 +இடங்களில், மூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ள திணைகள், பாடல் களம் / நிலப்பரப்போடு ஒத்துப்போகவில்லை

2. புரியாமையால் நிகழ்த்தியப் பெரும்குற்றம் (தடம்மாற்றம்) -
• 50+ பாடல்களின் மொத்த விளக்கமுமே தவறாகத் தரப்பட்டிருக்கிறது
• 100 +இடங்களில், தலைவியின் வாய்வார்த்தைகளை, தோழியின் வாக்குமூலம் எனப்பதிவு செய்யப் பட்டுள்ளதால் கலாச்சாரச் சீரழிவை ஊக்கவிக்கும் பொருளைத் தந்திருக்கிறது

ஒருசொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதைப் பற்றிக் கொண்டு விளக்கம் உரைக்கும் இடங்களில் மொத்தப் பாவின் உரையும் திசைமாறி, எங்கோ பயணித்து எங்கோ போய் முடிந்திருக்கிறது .. ’ ஒருசொல் தானே ’ என்று கொள்ளலாம் தான் . ஆனாலும் அது ஒரு துளி விசம் போல .. மொத்தப் பாவையும் பாழாக்கி இருக்கிறது .

முடிவாக, எங்கேயோ எப்போதோ தொடங்கிவைத்த விளக்கத்தைப் (கவனிக்கவும் : விளக்கத்தை., மூலத்தை அல்ல ) அடிப்படையாக்கொண்டு, விடாப்பிடியாகத் தொடர்ந்து, பின்வந்தோர் தம்தம் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்கள் என்னும் ஐயமே உறுதியாகிறது .

விளக்க(வுரை)ப் பாக்கள் பற்றி ஓர் அறிமுகம்:
‘ஆறடி’ பாக்களுக்கு ‘அறுபதுஅடி’யில் (கதை, முன்கதை, வசனம், கூற்று, கூற்று விளக்கம், பொருள்,அருஞ்சொற் பொருள், முதற்குறிப்பு, சிறப்புக் குறிப்பு – என்று) பெரும்விளக்கங்கள் உலவிவரும் இடத்தில், (அளபெடை, இடைச் சொல், இடைக்குறை, திரிபு, போலி, மிகுதிக் குறிப்பு, கழிவுக் குறிப்பு, அசை நிலை, பிரிநிலை, விகாரம், விகுதி, ஒற்று விரிவு, - என்று ) வேறு இடங்களில் கவனத்தைச் செலுத்தாமல் அடி நேர் அடியாய் , ’கண்ணுக்குக் கண்’ என்று ஆறடியிலேயே விளக்கத்தை தந்திருக்கிறேன் ( விளக்கத்தில் பல இடங்களில் மாறுபட்டிருந்தாலும், இந்த ’ நேரடி விளக்கம்’ அமைப்பை தேர்வதற்கு ஊக்கம் தந்த பாண்டியராஜா ஐயா அவர்களுக்கு (http://sangacholai.in ) நன்றி).

பாக்களுக்கு நேரடியாகப் பொருள் கூற முடியுமெனில் விளக்கம் என்னும் பேரில் - தலைவன், தலைவி,கிழவன்,கிழத்தி, தோழன். தோழி, செவிலித்தாய், பரத்தை என்னும் கதாப்பாத்திரங்களும், பாக்களுக்குச் சமந்தமில்லாத அவர்களுக்கு இடையேயான ’கற்பனை’பேச்சுக் குறிப்புகளும், கள முன் விளக்கங்களும், நிகழ்விடத்துக்கானச் சூழல் விளக்கங்களும் தேவையின்றிப் போய்விடும். இங்கே என் விளக்கத்தில் ‘போயிருக்கிறது’ என நம்புகிறேன்.

சொல்வது யார்? சொல்லப்படுவது யாருக்கு? சொல்வது என்ன? சொல்லப்படுவது எதைப்பற்றி? என எல்லாக் குறிப்புகளும் பாக்களின் உள்ளேயே அடங்கியுள்ளன . இருந்தும், ‘யார் யாருக்குச் சொன்னது’ என்னும் புரிதலில் பெரும் குழப்பம் அடைதிருக்கிறார்கள் உரையாசிரியார்கள். ( தலைவி, தலைவனுக்குச் சொன்னக் காதல் குறிப்புகளை, தோழி சொன்னதாக குறிப்பிடும் இடத்தில் பாடலின் பொருளும் , நோக்கமுமே மாறி, முறையில்லா உறவை ஊக்கப் படுத்துவதாகி விடுகிறது).

விளக்கவுரை அமைப்பு:
- -- - நேர்கோட்டுப் பாடல்கள் (233) :- முதல்வரியில் தொடங்கும்.
- O – வட்டச்சுற்றுப் பாடல்கள் (168) :- இடையில் எங்கோ ஓரிடத்தில் தொடங்கி, தொடங்கிய இடத்திற்குப் பின்னால் வந்து முடியும் குறியீடுகளின் பொருள் :
. :-பா தொடங்கும் இடம்
! :-பா முற்றுப் பெரும் இடம்

- @@@@@ - :-கீழே முடியும் இடத்திலிருந்து மேலே தொடரும் இடம்

# @@@@@ # :-மேற்கோள் / குறிப்பு ( இது இல்லாமல் இருந்தாலும் பாடல் தொடர்ந்து பொருள் தரும்)

>@@@@@ < :-சிறப்புக் குறிப்பு , குறிப்புக்குள் குறிப்பு ( இது இல்லாமல் இருந்தாலும் பாடல் தொடர்ந்து பொருள் தரும்)



சிலபரிந்துரைகள் :
. பாலை ;– பாலைவனம் போன்ற நிலப்பரப்பு தமிழக எல்லைக்குள் இல்லை என்பதால் இதை குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடைப்பட்ட ’பாழ்நிலம்’ என்று ஒரு புதுப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது. பாடல் 75ல் ’பாடலிபுத்திரத்தைப்( பீகாரின் தலைநகரான பாட்னா ) பரிசாக எடுத்துக்கொள்’ என்று பாணனிடம் தலைவி எளிதாகச் சொல்லுமிடம் , பாடல் ல் இந்தோனேசிய பாரம்பரிய மீன்பிடிக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பதிவுசெய்யுமிடம், சாளுக்கியரின் எல்லைகளை விவரிக்குமிடம், நம்முன்னோரின் நிலப்பரப்பு சார்ந்த எல்லைகளின் அறிவுத்திறன் விளங்கும். எனவே இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் பாலை என்பது (பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத்) வடக்கில் உள்ள ’தார்ப்பாலை’யாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே பிரிவு என்பதைத் தற்போதைய தமிழக எல்லைத் தாண்டித் தொலைதூர நாடுகளுக்குப் போனதாகவே கொள்ளவேண்டும்.

.குறிஞ்சிக்கு உரிப்பொருள் / உணர்ச்சி என்பது ‘உறவு’ மட்டும் தான் என்னும் குறிப்பின் அடிப்படையில் திணைகள் வகைப்படுத்தப்படுள்ளது .. இதிலும் மாற்றம் வேண்டும் . குறிஞ்சியில் வாழும் மக்களிடம் ஐந்துவகை உணர்ச்சிகளும் தான் இருக்கும் . மாறாதது ‘மலையும் மலைசார்ந்த இடமும் ‘ என்னும் இருப்பிடமும், வாழும் சூழலும் மட்டுமே .. இதுபோன்றே ஐவகைத் திணைகளிலும், ஐவகை உணர்ச்சிகளும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும் .

. உரிப்பொருள் / உணர்வுகளின் அடிப்படையில் அல்லது திணை / நிலப்பரப்பின் அடிப்படையில் புதியவரிசையில் பாடல்கள் எளிமையாக வகைப்படுத்தப்பட வேண்டும் . இங்கு ஒரு மாதிரி மறுவரிசை அமைப்பைத் தந்திருக்கிறேன் . ( பிரிவு, ஏக்கம், காத்திருத்தல் – என்னும் உணர்வுகளுக்குள் மிக நுண்ணிய மாறுபாடே உள்ளதால், இவற்றை வகைப் படுத்தி இருப்பதில் சில மாறுதல்கள் இருக்க வாய்ப்புண்டு)

இவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டு, 402 பாக்களைத் தந்த 200+ ஆசான்களுடன் கலந்து அவர்களது கோணத்தில் எனது விளக்கப் பாக்களை உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

முடிவுரை :
பாண்டியன் அவையில், ஈசன் நிலையிருந்து ( “எல்லாம் எமக்குத் தெரியும்”) தரப்பட்டிருக்கும் தெளிவுரைகளுக்குப் பதிலாக, நக்கீரன் அருகிருந்து (”குற்றம் குற்றமே”), புதியத் திருத்தஉரைகளைத் தந்திருக்கிறேன். .எனது புரிதலில் 10% அளவுக்குச் சரியாக இருப்பதாய் உணர்வீர்கள் என்றால், அதைநான் இத்தொடர் நெடும்பயணத்தின் வாழ்த்தாக எடுத்துக்கொள்வேன் .
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையின் சங்கு, இலக்கின்றி (தெரிந்தோ, தெரியாமலோ) நெறிக்கப் பட்டிருப்பதாக உணர்கிறேன். அதற்கு மருந்திட வேண்டுமென்பதே இப்போது இங்கு இலக்கு. அம்மருந்தைத்தேடி குளவிக் கூட்டுக்குள் கைவிட்டுத் துழாவிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்தத் தெளிவுடனும், எப்படியும் அடி/கடிவிழும் என்பதை ஏற்கும் உரமுடனும், ஆனாலும் ’தாய்’ வந்துஎன்னைக் காப்பாள் என்னும் துணிவுடனும், உங்கள் துணையுடனும் இக்களத்தில் வழக்காட இறங்கி இருக்கிறேன் …

இப்போது எனதுகோணம் கோணங்கித்தனமாய், கர்வம்/செருக்கு உடையதாய்த் தோன்றுதான்., தயவுகூர்ந்து இறுதிவரைத் தொடர்ந்து , சரியானதைத் தீர்வைத் தேர்ந்து, நிகழ்ந்திருக்கும் சரிவைச் சீராக்க உதவுங்கள்…

வாழ்க உறவுகள் !




தொடரும்...